காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டியின் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையைத் தூக்கி (ஸ்நாட்ச் 126 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 160 கிலோ) இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைச் சேர்த்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தனது முதல் முயற்சியிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் கோவில்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயதான ராஜா முத்துப்பாண்டி, தனது கடுமையான உழைப்பால் பளுதூக்குதல் துறையில் உயர்ந்துள்ளார். இளமைப் பருவத்திலிருந்தே பளுதூக்குதலில் தீவிர ஆர்வம் செலுத்தி வந்த இவர், உள்ளூர் அளவில் கடின பயிற்சி மேற்கொண்டு படிப்படியாக முன்னேறினார். தற்போது இவர் இந்திய ரயில்வே துறையில் விளையாட்டு வீரராகப் பணிபுரிந்து வருகிறார்.
உள்நாட்டுப் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ள இவர், பல்வேறு எடைப்பிரிவுகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் போட்டியில் 61 கிலோ பிரிவில் 289 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றதோடு புதிய தேசிய சாதனையும் படைத்தார். பின்னர் 65 கிலோ பிரிவுக்கு மாறிய அவர், 302 கிலோ (ஸ்நாட்ச் 130 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 172 கிலோ) எடையைத் தூக்கி அனைத்துப் பிரிவுகளிலும் தேசிய சாதனையைத் தன்வசப்படுத்தினார். மேலும், 2025 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், நார்வேயில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 9-வது இடமும் பிடித்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தார்.
ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெற்றி எளிதில் கிடைத்ததல்ல; கடுமையான காயங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் கடந்து வந்துள்ளார். தீவிர அறுவை சிகிச்சைகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற உடல்நலப் பாதிப்புகளால், ஒரு கட்டத்தில் விளையாட்டையே விட்டுவிடலாமா என்ற கடினமான சூழ்நிலையை அவர் எதிர்கொண்டார். இருப்பினும், விடாமுயிரியுடன் மீண்டு வந்து இன்று காமன்வெல்த் மேடையில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றைப் படைத்துள்ளார்.
