கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணியை ரத்து செய்து, அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 10 -ம் தேதியன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலுக்கு முந்தைய தனது கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அன்றைய தினம் காலை இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலை வழங்க உடனடியாக தடை விதிக்கவில்லை என்றபோதிலும், வழங்கப்படும் வேலை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனக் கூறி இருந்தது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனங்கள் செல்லாது எனத் தீர்ப்பளித்ததுடன், அதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி நியமன ஆணைகளும் இதன் மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் வழிகாட்டுதல்கள் இருப்பதாகவும், வயது, கல்வித்தகுதி உள்ளிட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே கரூர் சம்பவத்தில் பணிகள் வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், ஒவ்வொரு துறையிலும் காத்திருப்புப் பட்டியல் நடைமுறையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விதிகளின்படி பின்னரே பணிகள் நிரந்தரம் செய்யப்படும் என்றும், உடனடியாக நிரந்தர அரசுப் பணி வழங்கப்படுவதில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம், தினந்தோறும் சாலை விபத்துகள், தொழிற்சாலை மற்றும் சிவகாசி போன்ற பகுதிகளில் வெடி விபத்துகளில் பலர் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. அத்தகைய அனைத்து சம்பவங்களிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியது.
மேலும், அரசுப் பணிக்காக ஆயிரக்கணக்கானோர் போட்டித் தேர்வுகள் மூலம் காத்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரசுப் பணி வழங்குவது சமத்துவக் கொள்கைக்கு முரணாக அமையக்கூடும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வாழ்வாதார உதவித் திட்டங்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் மூலம் உதவுவது சிறந்த மாற்று வழியாக இருக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அரசுத் தரப்பு இது சாதாரண பணி நியமனம் மட்டுமே என வாதிட்ட நிலையில், “எந்த அரசுப் பணியும் சாதாரணமானது அல்ல; அது ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் முக்கியமான பணியே” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து, அதனடிப்படையில் வழங்கப்பட்ட பணி நியமனங்களும் செல்லாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
