திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள புனித கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயில் பக்தர்களிடையே பெரும் ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும், அதன் குறுகிய குகைப்பாதை சமீபகாலமாக உயிரிழப்பு மற்றும் ஆபத்துகளுக்கு காரணமாகி வருகிறது. இந்தக் கோயிலில் உள்ள சிறிய குகை அமைப்பு மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. பக்தர்கள் பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, கைகளை ஊன்றி முன் வாசல் வழியாக வெளியேறி, அங்குள்ள நந்தி சிலையை வணங்கி செல்லும் வழக்கம் உள்ளது.
கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான மணிக்குமார் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் மேற்கொண்டார். இடுக்கு பிள்ளையார் கோயிலை அடைந்த அவர், பாரம்பரிய முறைப்படி குகைப்பாதை வழியாக நுழைந்தார். உடல் பருமன் காரணமாக உள்ளே சிக்கிக்கொண்ட அவர், மூச்சுத் திணறலால் தவித்து மயக்கமடைந்தார். சக பக்தர்கள் உடனடியாக முயன்று அவரை வெளியே இழுத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சோகம் மறைவதற்குள், அடுத்த நாள் அதே இடத்தில் மற்றொரு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் பக்தர் கிரிவலத்தின்போது இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று குகைப்பாதை வழியாக உள்ளே நுழைந்தார். உடல் பருமன் காரணமாக அவரும் சிக்கிக்கொண்டார். உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அவரது கையைப் பிடித்து இழுத்து பத்திரமாக வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு பெரிய அளவில் உடல்நலக் குறைவு ஏற்படவில்லை.
தொடர் சம்பவங்களை அடுத்து, இடுக்கு பிள்ளையார் கோயில் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. குகைப்பாதை வழியாக நுழைய முயல்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து பதாகை ஒன்றை வைத்துள்ளது. அதில், “உடல் பருமன் உள்ளவர்களுக்கும், உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை” என தெளிவாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஆன்மீக ஆர்வலர்களின் முக்கியப் பாதையாக விளங்கும் நிலையில், இத்தகைய இடர்ப்பாடுகள் பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. அதிகாரிகள் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
