பாஜக மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று திடீரென வந்ததைத் தொடர்ந்து, அவர் தவெகவில் சேரப்போகிறாரா என்கிற அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பல்வேறு பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாஜகவின் மாநில துணைத் தலைவரான குஷ்பு தலைமைச் செயலகத்திற்கு வந்து மிக முக்கிய நபரைச் சந்தித்துப் பேசியதாகவும், அது முதல்வர் விஜயாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த குஷ்புவிடம் செய்தியாளர்கள் யாரைச் சந்தித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஒரு முக்கிய வி.வி.ஐ.பி–யைச் சந்திக்க வந்தேன்” என்று சுருக்கமாகக் கூறினார். அப்போது அவரது வாகனம் வருவதற்குச் சில நிமிடங்கள் தாமதமானதால், அவர் அங்கேயே சிறிது நேரம் நடந்துகொண்டிருந்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

குஷ்பு தலைமைச் செயலகத்தில் இருந்த அந்த நேரத்தில் தவெகவின் முக்கிய அமைச்சர்களும் அங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவும் தமிழக வெற்றிக் கழகமும் பாஜகவும் தமிழக வெற்றிக் கழகமும் கொள்கை ரீதியாக மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் தலைமைச் செயலகம் வந்து சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, அவர் பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது.
குஷ்பு பாஜகவில் சேர்ந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், வெற்றி பெற முடியவில்லை. மேலும் பாஜகவில் குஷ்புவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற பேச்சும் உள்ளது. இந்த நிலையில், அவர் தனது அரசியல் எதிர்கால வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு தவெகவில் சேரும் முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய முடிவை குஷ்பு எடுத்திருந்தால் இன்னும் ஓரிரு நாளில் முதல்வர் விஜய்யை அதிகாரப்பூர்வமாக சந்திக்கக்கூடும்.
