விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான ராமச்சந்திரன் (40), ராம்பிரகாஷ் (32) ஆகியோர் சட்டவிரோதமாகத் தயாரித்து வந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உரிய அனுமதியும் பெறாமல் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் ஷெட்டுகள் அமைத்து பட்டாசு ஆலை நடத்தி வந்துள்ளனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் ஆடு, மாடுகளுக்கு தகர ஷெட் அமைப்பதாகக் கூறி சட்டவிரோத பட்டாசு ஆலைகள் நடைபெற்று வருவதாகத் தகவ்லகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் அண்மையில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தினைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை முற்றிலுமாகத் தடுப்போம் எனக் கூறியுள்ள விருதுநகர் மாவட்ட காவல்துறை அனுமதியின்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் பட்டாசு தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்துள்ளது.
அவ்வாறு யாரேனும், பட்டாசு ஆலைகளை நடத்துவது தெரியவந்தால், இதுகுறித்த தகவல்களை 96009 69100 என்ற எண்ணிற்கு உடனடியாகத் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
