சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளிப்பது வழக்கம்.
குறிப்பாக, பட்டா தொடர்பான பிரச்சனைகள், பத்திரப்பதிவு, நில அபகரிப்பு புகார்கள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இன்று நிலப் பிரச்சனை காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் குழந்தையுடன் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
கடந்த சில நாட்களாகவே தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் நபர்கள், தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், இன்று சேலத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
