டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அப்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கை நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.
முன்ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், செந்தில் பாலாஜியை கைது செய்ய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
