நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி ஆற்றில் நிகழ்ந்த சட்டவிரோத செயலைத் தடுத்த போலீசார், மணல் கடத்தலுக்காக தனியாக கட்டப்பட்டிருந்த கான்கிரீட் பாலத்தை அதிரடியாக இடித்து தள்ளியுள்ளனர்.
அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, வெங்கரை, பொத்தனூர் உள்ளிட்ட காவிரிப் படுகைகளில் நீண்ட காலமாகவே மணல் திருட்டு நடைபெறுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி வரையிலான நேரங்களில், பைக் மற்றும் மினி ஆட்டோக்களைப் பயன்படுத்தி ஆற்றுக்குள் சென்று மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு திருடப்படும் மணல் ஒரு மூட்டை 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், நன்செய் இடையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 15 அடி நீளத்தில் கான்கிரீட்டைக் கொண்டு தற்காலிகப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆற்றுக்குள் வாகனங்கள் எளிதாகச் சென்று வர ஏதுவாகவே இந்த ரகசியப் பாலம் போடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முதலில் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய பலன் கிடைக்காததால், பரமத்தி வேலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாகக் களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படையினர், அந்த இடத்தைப் பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிய போலீசார், மணல் கடத்துபவர்களுக்கு உதவியாக இருந்த அந்த கான்கிரீட் பாலத்தை முற்றிலுமாக உடைத்துத் தரைமட்டமாக்கினர். இவ்வளவு பெரிய பாலத்தைக் கட்டியது யார், இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆற்றின் நடுவே பாலமே அமைத்து மணல் கொள்ளை அடித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
