டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் கொள்முதல், வாகன டெண்டர் மற்றும் காலி பாட்டில் சேகரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூலை 28-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் எனக் கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று விசாரணைக்கு எடுத்தது.

விசாரணைக்குப் பிறகு, செந்தில் பாலாஜிக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புலனாய்வு விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சாட்சிகளை கலைக்க முயலக்கூடாது என்றும், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறினால் வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
விசாரணை தொடர்பாக இடைக்காலத்தில் கூடுதல் நிவாரணம் தேவைப்பட்டால், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
