தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரியது என்றும், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்துவது அரசின் முதல் கடமை என்றும் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற வெற்றி தமிழர் பேரவையின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.
அரசுப் பள்ளிகளுக்கு அதிக கவனம் தேவை
“மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மேடைக்கு வந்து பரிசு பெற்றபோது, இவர்கள்தான் நம் உறவினர்கள், இவர்களின் பெற்றோர்கள்தான் நம் பங்காளிகள் என்று நினைக்கிறேன். பணக்காரர்களுக்கு மாஸ்கோ இருக்கிறது, டெல்லி இருக்கிறது, சென்னை இருக்கிறது. ஆனால் கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சடசடவென்று குறைந்திருக்கிறது என்று தகவல் வருகிறது. அது சரியக் கூடாது.

தனியார் பள்ளிகளில் உள்ள கல்வித் தரம், சுற்றுச்சூழல், சுகாதார வசதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளையும் அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் ஏற்படுத்திக் கொடுப்பதே ஒரு ஆட்சியின் முதல் கடமை” என்று அவர் கூறினார்.
“தாய்மொழி கண்; பிறமொழி கண்ணாடி”
பிறமொழி கற்பது குறித்து பேசிய அவர்,”நீங்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள உரிமை உண்டு. ஆனால் முதலில் தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடமை இருக்கிறது. தாய்மொழிக்கும் பிறமொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? தாய்மொழி என்பது கண் போன்றது; பிறமொழி என்பது கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது.
கண் இல்லையென்றால் கண்ணாடி எதற்கு? முதலில் கண் என்ற தாய்மொழி இருக்கட்டும். அதன் பிறகு ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்சு என எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்” என்று விளக்கினார்.
“தேவை வரும்போது இந்தி கற்றுக்கொள்ளுங்கள்”

இந்தி மொழி குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், “இந்தியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவை இருந்தால் கற்றுக்கொள்ளுங்கள். இதை நான் மிகவும் தெளிவாகச் சொல்கிறேன்.
ஏன் சொல்கிறேன் தெரியுமா? அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழ்நாட்டுக்கு பலர் வருகிறார்கள். அவர்கள் முதலில் தங்கள் தாய்மொழியை மட்டுமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இரண்டு ஆண்டுகளில் நம்மோடு பழகி, தமிழ் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு தமிழ் யார் கற்றுக் கொடுத்தார்கள்? யாராவது வகுப்பு எடுத்தார்களா? காலம்தான் அவர்களுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தது.
அதேபோல தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றால், அந்தந்த மாநில மொழிகளை காலமே அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். எனவே பிறமொழிகளை காலத்தின் கைகளில் விட்டுவிடுங்கள்” என்றார்.
