நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக கடந்த ஜூலை 18-ஆம் தேதி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு ஜூலை 27-ஆம் தேதி கடிதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரச்சாரப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பயணம் தொடங்கத் தயாராக இருந்த நிலையில், ஜூலை 30-ஆம் தேதி காவல்துறையினர் திடீரென அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், இந்த அனுமதி மறுப்பு உத்தரவை ரத்து செய்யக் கோரி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
