நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, மாநில அரசுகள் விரும்பினால் வாபஸ் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜூலை 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் வழக்குகளின் விசாரணையைத் தொடரலாம்; ஆனால், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது கட்டாய நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று கடந்த ஜூலை 28-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவால், அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெற முடியாத நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மனுதாரர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, “மாநில அரசுகள் சட்டப்படி வழக்குகளை முடிக்கவோ அல்லது வாபஸ் பெறவோ எந்தத் தடையும் இல்லை” என்று தெளிவுபடுத்தியது.
மேலும், முந்தைய உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த “குற்றப் பின்னணி கொண்டவர்கள்” என்ற சொல், கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான குற்றங்கள் போன்ற கடுமையான குற்றங்களில் தொடர்புடையவர்களை மட்டுமே குறிக்கும் என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.
இதற்கிடையில், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 2,738 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
போராட்டத்தின் போது காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் மனுக்களும், போலீஸ் அத்துமீறல்கள் தொடர்பான மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் உள்ளன.
