தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்பு படுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசிய புகாரின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
காவிரி நதி நீர் மற்றும் மேகதாது அணை தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சுட்டிக்காட்டி பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு பேசியதாக , தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தலைமையில் தவெக நிர்வாகிகள் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் கிழக்கு போலீசார், துணை ஆணையர் தலைமையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு வருகை தந்தனர்.
அங்கு திமுகவினர் எதிர்ப்புக்கு மத்தியில், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர். அவரை தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
