காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் தமிழகம்-கர்நாடகா இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகையில், கர்நாடகாவில் தண்ணீர் திறக்கக் கூடாது என்ற கோஷங்கள் எழுந்துள்ளன. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முன்னெடுத்து வருவதால், தமிழகத்திற்கு வரும் நீர் அளவு குறையும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளது. ஆடிப்பெருக்கு காலத்திலும் டெல்டா ஆறுகள் வறண்டு காணப்படுவதால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தவெக அரசின் அணுகுமுறையைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இதில், முதலமைச்சர் விஜயை ‘நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர்’ எனச் சாடிய அவர், காவிரி விவகாரத்தில் போதிய நடவடிக்கை இல்லாததை விமர்சித்தார். கூட்டத்தில் த்ரிஷா பெயர் கோஷமிடப்பட்டபோது, “எங்க தண்ணி வருதோ இல்லையோ, அங்க தண்ணி வரணும்” எனப் பேசியது இரட்டை அர்த்தமாகப் புரிந்துகொள்ளப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு தவெக அமைச்சர்கள், பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தவெக மகளிரணி புகாரின் பேரில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யும் நோக்கில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் சென்றனர்.
இதற்கிடையே, சட்டமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அவரைக் கலந்துகொள்ள விடாமல் தடுக்கும் நோக்கில் கைது செய்ய முயல்கிறார்கள் எனக் கூறி, கைதுக்குத் தடை விதிக்கக் கோரி திமுக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று பிற்பகல் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளனர். காவிரி உரிமையை நிலைநாட்டவும், மேகதாது திட்டத்தைத் தடுக்கவும் தொடர் நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கைகள் இன்னும் வலுவாகவே ஒலித்து வருகின்றன.
