காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகாவிடமிருந்து மாதந்தோறும் உரிய அளவு நீரைப் பெறுவது தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக அவர் கூறினார்.
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர், காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கும், பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் உயிர்நாடியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகாவிடமிருந்து மாதந்தோறும் உரிய அளவு நீரைப் பெறுவது தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக அவர் கூறினார்.
காவிரி நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்வந்ததாகவும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கர்நாடக தரப்பின் வேண்டுகோளின் பேரில் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு தனது உரிமையை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார். பின்னர் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டமும் அந்த உத்தரவை உறுதி செய்ததாக குறிப்பிட்டார்.
எனினும், கர்நாடக அரசு முழுமையாக உத்தரவை செயல்படுத்தவில்லை என்றும், 3,500 கனஅடி கிடைக்க வேண்டிய நிலையில் 144 முதல் 619 கனஅடி வரை மட்டுமே தமிழகத்திற்கு வந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதனால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நீர்பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
இதையடுத்து, நிலுவையில் உள்ள நீரையும் உடனடியாக திறந்துவிடவும், ஆகஸ்ட் 12-க்குள் மொத்தம் 26.594 டி.எம்.சி. நீர் கிடைப்பதை உறுதி செய்யவும் காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தென்மேற்கு பருவமழை தாமதம் மற்றும் கர்நாடக அணைகளுக்கான குறைந்த நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவில்லை என்றும், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையிலும் ஆகஸ்ட் 6 நிலவரப்படி தமிழகத்திற்கு கிடைத்த மொத்த நீர் 4.947 டி.எம்.சி. மட்டுமே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய அளவுடன் ஒப்பிடுகையில் 41.412 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரங்களில் பிரதமருக்கு தமிழக முதல்வர் இரண்டு முறை கடிதம் எழுதியிருப்பதுடன், அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டின் நீர் உரிமையை பாதுகாக்க தவெக அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
