கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடி கிராமத்தில் வசிக்கும் குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டில் ஒரு ஒற்றைக் கொம்பு யானை புகுந்து, வீட்டின் கூரையை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவத்தின் பின்னணி
நேற்று முன்தினம், நல்லூர் பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் ஒரு யானை நுழைந்துள்ளது. அப்போது, வீட்டின் கூரையை யானை பந்தாடியுள்ளது. இதனை கண்ட அப்பகுதிவாசி ஒருவர் தனது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். யானையின் ஆக்ரோஷமான செயலைக் கண்டு மிரண்டு போன அப்பகுதி மக்கள், “ஐயோ… உள்ள போ… உள்ள போ…” எனக் கூச்சலிட்டுள்ளனர்.
பெரும் சேதம் தவிர்ப்பு
யானை வீட்டின் கூரையை இடித்தபோது, அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டின் கூரை கடுமையாக சேதமடைந்தது. யானையின் இந்த ஆக்ரோஷமான நகர்வின்போது அங்கிருந்த ஓர் ஆடு அச்சத்துடன் ஓடியது வீடியோவில் பதிவாகியுள்ளது.
வனத்துறையின் நடவடிக்கை :
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டினர். பொதுவாக வறட்சி காலங்களில் யானைகள் ஊருக்குள் வருவதுண்டு. ஆனால், தற்போது மழைக்காலத்திலும் யானைகள் ஊருக்குள் உலா வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடி மற்றும் கிராமப்புற மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
