16 ஆண்டுகளுக்கு பிறக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையெங்கும் திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க குடமுழுக்க நடந்தேறியது. முழுக்க முழுக்க தமிழில் நடந்த குடமுழுக்கு பக்தர்களை நெகிழச் செய்தது.

செந்தூர் கடற்கரையில் வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு, 15 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாமல் இருந்து வந்தது. பிறகு ரூ.300 கோடியில் மெகா திட்ட வளாக பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கடந்த ஒரு வருடமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நாள்தோறும் பலவிதமான பூஜைகளும், யாகங்களும் வளர்க்கப்பட்டு வந்தது.

கோவில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 71 ஓம குண்டங்களும், அதன் அருகே சுவாமி பெருமானுக்கு 5 ஓம குண்டங்களும் என மொத்தம் 76 ஓம குண்டங்களுடன் மிக பிரமாண்டமாக தங்கநிறத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு இருந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் தமிழ் மறைகள் ஓதப்பட்டன. 20 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி அளித்தன. இந்த நிகழ்வில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கடற்கரை முழுவதும் அலையா, தலையா என்று தெரியாத அளவுக்கு பக்தர்கள் நிரம்பி இருந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கிற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க 3 தற்காலிகப் பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டன. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் செய்யும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்பட்டன. குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version