தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக நடிகை தனுஸ்ரீ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஷால் நடிப்பில் வெளியான ”தீராத விளையாட்டு பிள்ளை” படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ME TOO இயக்கத்தில் குரல் கொடுத்த பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். ஜூலை 25, 2025 அன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் Me Too விவகாரத்தில் பேசிய பிறகு, என்னைச் சுற்றி மர்மமான பல விஷயங்கள் நடக்கின்றன. என்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக உணர்கிறேன்,” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.
”தனது காரில் பிரேக் செயலிழப்பு மற்றும் உணவில் விஷம் கலக்க முயற்சி போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டினார். திரைத்துறையில் செல்வாக்கு மிக்க சிலர் இருக்கலாம்” என்று அவர் குற்றம்சாட்டினார். 2018-ல் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்தியாவில் ‘Me Too’ இயக்கத்தை பிரபலபடுத்திய முக்கிய நபராக தனுஸ்ரீ தத்தா அறியப்படுகிறார்.
இந்தப் புகார்களுக்கு பிறகு, தனது தொழில் வாழ்க்கையில் பல தடைகளை எதிர்கொண்டதாகவும், இப்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதேப் போல, ”மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் பணிபுரிய இருந்ததாகவும், அவரது மரணத்திற்கு பிறகு தான் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக” கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.