HOLLYWOOD WALK OF FAME என்பது அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். இது ஹாலிவுட் வுல்வார்ட் மற்றும் வைன் ஸ்ட்ரீட் ஆகியவற்றில் உள்ள நடைபாதையில், திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிரபலத்தின் பெயர் மற்றும் அவர்கள் சாதனை புரிந்த துறையைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 1960ல் தொடங்கப்பட்டு, ஹாலிவுட் சேம்பர் ஆப் காமர்ஸால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நட்சத்திரம் வழங்கப்படுகிறது. இது உலகளவில் புகழ்பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த HOLLYWOOD WALK OF FAME-க்கு இந்தியாவிலிருந்து தீபிகா படுகோனே தேர்வாகியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா, நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு துவா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் பிசியாக வலம் வருகிறார் தீபிகா.

HOLLYWOOD WALK OF FAME-ல் தீபிகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹாலிவுட்டின் வர்த்தக சபை நேற்று அறிவித்தது. இதன்மூலம் மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த கவுரவம் தீபிகாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version