தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 2026 – 2029-ஆம் ஆண்டிற்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ‘நம்ம கே.பாக்யராஜ் அணி’ சார்பில் பிரபல இயக்குநர் சேரன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது அணியின் வேட்பாளர்கள் விவரங்களையும், சங்கத்திற்கான நோக்கங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவரது அணியில் முக்கியப் பொறுப்புகளுக்குத் திரைத்துறையின் முன்னணி ஆளுமைகள் களம் இறங்கியுள்ளனர். செயலாளர் பதவிக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், துணைத் தலைவர்கள் பதவிக்கு இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு செல்வ பாரதி, பாஸ்கர் சக்தி, கே.பி.ஜெகன், கே.பி.பி. நவீன் ஆகியோருடன் 12 செயற்குழு உறுப்பினர்களும் இந்த அணியில் களம் காண்கின்றனர்.
இயக்குநர் கே.பாக்யராஜால் விரும்பித் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இவ்வணியில் அதிகம் இருப்பதால், இது “நம்ம கே.பாக்யராஜ் அணி” என்று அழைக்கப்படுவதாக சேரன் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் போட்டி மனப்பான்மையுடனோ அல்லது சுயநலத்துடன் ஆதாயம் தேடும் நோக்கத்திலோ இணையவில்லை. தமிழ் சினிமாவின் முதுகெலும்பாக விளங்கும் எழுத்தாளர்களின் நலத்திட்டங்களையும், சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே எங்கள் அணியின் முதன்மை நோக்கம். இதற்கு உறுப்பினர்களின் வாக்குகள் மட்டுமே முழு உத்தரவாதம் அளிக்க முடியும்” என சேரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
