இயக்குநர் மாரி செல்வராஜ், தனது அடுத்த புதிய (6-வது) திரைப்படத்தின் அறிவிப்பு நாளை (ஜூன் 1) வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முற்போக்கு இயக்குநரான மாரி செல்வராஜ் இதுவரை 5 திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனது திரைப்படங்களில் எளியவர்களை குரலை ஒலிக்கும் கதைக்களங்களை திரையில் பேச வைத்திருப்பார் மாரி செல்வராஜ்.
2018ல் சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான எளியவனின் வலியைப் பேசிய பரியேறும் பெருமாள், 2021ல் கிராமத்து மக்களின் அடிப்படை உரிமைக்காக ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியை பேசிய கர்ணன், 2023ல் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் சாதிய ஆதிக்கத்தை உடைத்தெறியும் மாமன்னன், 2024ல் உழைப்புச் சுரண்டலை உணர்த்திய உணர்வுப்பூர்வமான வாழை, 2025ல் விளையாட்டுத் துறையில் விளிம்பு நிலை மனிதர்கள் சந்திக்கும் சவால்களைப் பேசிய பைசன் காளமாடன் ஆகிய திரைப்படங்கள் மாரி செல்வராஜின் தனித்துவமான எழுத்துகள்.
இந்தநிலையில், தனது 6வது திரைப்படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் கதிர், பிரியங்கா மோகன் மற்றும் கயடு லோஹர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். மாரி செல்வராஜ் – இளையராஜா இணையும் முதல் படம் இது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
