தூத்துக்குடி அருகே பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தட்டி கேட்டதற்காக, போதை கும்பல் ஒன்று பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள கீழ அரசடி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நேற்று மாலை இங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் ஒருவர், அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்தாமல், வாகனங்கள் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு அருகிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர், பொது இடத்தில் இதுபோன்று செய்ய வேண்டாம் என சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து மது மற்றும் கஞ்சா போதையில் மேலும் 10 பேருடன் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பங்க்கிற்குள் நுழைந்துள்ளனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த ஊழியர்களைக் கட்டை, கத்தி மற்றும் அரிவாள்களால் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல், பங்க் அலுவலகத்தின் கண்ணாடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் இயந்திரங்களையும் அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த சௌரவ் என்ற ஊழியர் அளித்த புகாரின் பேரில், தாளமுத்து நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, தப்பியோடிய போதை கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version