பிஎல் கிரிக்கெட் தொடரில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) விதிமுறையை முழுமையாக நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ‘ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ’ (ESPNcricinfo) விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து பேசுகையில்,”என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் சொல்வது என்னவென்றால், ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பாக்ட் பிளேயர்’ விதிமுறை உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஏற்கனவே டி20 போட்டிகளில் 20 ஓவர்கள் மட்டுமே விளையாட வேண்டிய சூழலில், இந்த விதியால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணிகள் தங்களது வரிசையில் சேர்த்துக் கொள்கின்றன. பிட்ச்சுகள் ஏற்கனவே பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி, பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், இந்த விதிமுறை ஆட்டத்தின் சமநிலையை முற்றிலுமாகப் பாதிக்கிறது” என்றார்.

கடந்த சில ஐபிஎல் சீசன்களாக ரன் குவிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இந்த விதிமுறை பந்துவீச்சாளர்களை மேலும் பலவீனமாக்குகிறது என்று சச்சின் கவலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும், இந்த விதிமுறை ஆல்-ரவுண்டர்களின் மதிப்பை குறைக்கிறது என இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்

தற்போதுள்ள சூழலில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக ஆட்டத்தை மாற்ற சச்சின் டெண்டுல்கர் இரண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பந்துவீச்சுக்கான பவர்பிளே

தற்போதுள்ள 6 ஓவர் பவர்பிளேயில் 2 ஃபீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்குப் பதிலாக முதல் 4 ஓவர்களை பேட்ஸ்மேன்களுக்கான பவர்பிளேயாக (2 ஃபீல்டர்கள் வெளியே) வைக்கலாம். மீதமுள்ள 2 பவர்பிளே ஓவர்களை எப்போது எடுக்க வேண்டும் என்பதை ஃபீல்டிங் செய்யும் அணியின் கேப்டன் தீர்மானிக்கலாம். அந்த 2 ஓவர்களில் கூடுதலாக ஒரு ஃபீல்டரை (மொத்தம் 3 ஃபீல்டர்கள்) வெளிவட்டத்தில் நிறுத்த அனுமதிக்கலாம். இதன் மூலம் ஃபீல்டிங் செய்யும் அணி ஆட்டத்தை நன்றாகக் கட்டுப்படுத்த முடியும்.

சிறந்த பந்துவீச்சாளருக்கு 5 ஓவர்கள்

ஒரு போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 4 ஓவர்கள் மட்டுமே வீசலாம் என்ற விதியை மாற்ற வேண்டும் என சச்சின் கூறியுள்ளார்.

“அணியில் உள்ள ஒரு சிறந்த பந்துவீச்சாளருக்கு மட்டும் 5 ஓவர்கள் வீச அனுமதி வழங்க வேண்டும். ஏனெனில், ஒரு அணியின் சிறந்த பந்துவீச்சாளர் அந்த 5-வது ஓவரை வீசும்போது ஆட்டம் சுவாரசியமாகும். சிறந்த பேட்ஸ்மேன்கள் சில சமயங்களில் 20 ஓவர்கள் வரை களத்தில் நின்று விளையாடும்போது, ஒரு சிறந்த பந்துவீச்சாளர் மட்டும் ஏன் 5 ஓவர்கள் வீசக்கூடாது?” என்று சச்சின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version