நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் மூலம் சோழர் கடல் ராஜ்ஜியம் அறிந்து ஆச்சர்யப்பட்டதாகவும், நாட்டிற்கு பெருமை அளிப்பதாகவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், ஆனைமலை சோழர் செப்பேடுகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள்’ மற்றும் சோழப் பேரரசின் உலகளாவிய கடல்சார் வல்லமை குறித்தும் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அவர் பெருமையுடன் உரையாற்றினார்.

ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் தாய்மடி திரும்புவது உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும், இந்தியர்களுக்கும் பெருமிதமான தருணம் என்று குறிப்பிட்ட பிரதமர், சோழர்களின் கடல்சார் சாம்ராஜ்ஜியம் குறித்து விரிவாகப் பேசினார். சோழப் பேரரசு என்பது வெறும் நிலப்பரப்பை மட்டும் ஆண்ட அரசு அல்ல; அது உலகிலேயே மிக வலிமையான மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கடல்சார் சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்தது என்று பெருமிதம் கொண்டார். இன்றைய இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜய நாட்டு மன்னரான ஸ்ரீ மார விஜயோத்துங்க வர்மன், நாகப்பட்டினத்தில் கட்டிய ‘சூடாமணி விஹாரம்’ என்ற பௌத்த மடாலயத்திற்கு சோழ மன்னர்கள் நிலங்களை தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடுகள் விவரிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

11-ம் நூற்றாண்டிலேயே சோழர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் மிக நெருக்கமான கடல்வழி வணிகம், தூதரக உறவுகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களைக் கொண்டிருந்தனர் என்பதற்கு இந்தச் செப்பேடுகளே மிகச்சிறந்த சான்று என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். சைவ சமயத்தைப் பின்பற்றிய சோழப் பேரரசின் நீதிமன்றம், வெளிநாட்டு பௌத்த மத நிறுவனங்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் சோழர்களின் உலகளாவிய சிந்தனையும் மத நல்லிணக்கமும் உலகிற்குத் தெரிய வந்துள்ளது என்றார்.

அண்மையில் நெதர்லாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அங்குள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் கடந்த 1862-ம் ஆண்டு முதல் வைக்கப்பட்டிருந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதை பிரதமர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மொத்தம் 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பேடுகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, சுமார் 30 கிலோ எடை கொண்டது. இதன் நடுவே ராஜேந்திர சோழனின் அதிகாரப்பூர்வ அரச முத்திரையுடன் கூடிய வெண்கல வளையம் அமைந்துள்ளது. இந்தச் செப்பேடுகள் மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, அவரது மகன் ராஜேந்திர சோழனின் காலத்தில் செம்பில் பொறிக்கப்பட்டவை ஆகும். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இந்த வரலாற்று ஆவணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு

ராஞ்சியில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய தேசிய சாதனை படைத்த இந்திய கடற்படையைச் சேர்ந்த குரிந்தர்வீர் சிங் மற்றும் அனிமேஷ் குஜூர் ஆகிய வீரர்களைப் பாராட்டி அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ‘டால்பின் மீட்பு ஆம்புலன்ஸ்’ தற்காலிக நடமாடும் தீவிர சிகிச்சை பிரிவாகச் செயல்பட்டு வருவதைப் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version