தென்னிந்திய நடிகர் சங்கத்தின் (SIAA) புதிய கட்டிடக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால், நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எனது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினரான திரையுலகக் சொந்தங்களைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரையும் சந்திக்கும் போதெல்லாம் எப்போதும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான உணர்வு எனக்குள் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், சங்கத்தின் நீண்டகாலக் கனவு குறித்துப் பேசிய அவர், “நமது கனவு இல்லமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் தயாராக உள்ளன.
பல கட்டப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள், தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் பல தடைகளைக் கடந்து, நாம் நினைத்ததை நிஜமாக்கிக் காட்டுவதற்கு ஒரு பெரிய குழுவின் கூட்டு உழைப்பு தேவைப்படுகிறது. ஆம், மிக அருகில் இருக்கும் அந்த பெருமிதமான தருணத்தை நோக்கி நாம் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம், இறைவன் ஆசீர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்தார்.
பல்வேறு நிதி நெருக்கடிகள் மற்றும் சட்டச் சிக்கல்களால் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள், தற்போது திறப்பு விழாவை நோக்கி இறுதி வடிவம் பெற்று வருவது குறித்து திரையுலகினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

