மிழகத்தில் அதிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸ் பரவி வருவதாக எழுந்துள்ள தகவல்களுக்குப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டுகளை விட தற்போது கொரோனா தொற்று மிகவும் குறைவாகவே உள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் குறித்து அரசுத் துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது நபர் தீவிர பாக்டீரியா தொற்று (Klebsiella pneumoniae), நீரிழிவு மற்றும் நீண்டகாலச் சிறுநீரக நோய் காரணமாகவே உயிரிழந்தார். மற்றொரு 68 வயது நபர் பெருங்குடல் புற்றுநோயால் ஏற்பட்ட சுவாசச் செயலிழப்பால் மரணமடைந்தார்; இவருக்குக் கோவிட் தொற்று என்பது தற்செயலாக மட்டுமே கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) கீழ் வழக்கமான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 2024-ல் 990 பேருக்கும், 2025-ல் 1,250 பேருக்கும், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இதுவரை 335 பேருக்கும் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் கண்டறியப்பட்டதே தவிர, சமூகப் பரவல் (Outbreak) கிடையாது. புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் (NIV) பரிசோதனை முடிவுகளும் தற்போது பரவும் வைரஸ் லேசான அறிகுறி கொண்டது தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்; காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version