நடிகர் ரவி மோகன் கடந்த 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பவரது மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக ரவி மோகன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் ரவிமோகனுடன் இணைந்து வாழவே விரும்புவதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட, அதன் பிறகு தனக்கு விவகாரத்து பெற்றுத் தரக்கோரி ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு மரியாதை இல்லை எனவும், பொம்மைப் போல் நடத்தப்படுவதாகவும் ரவி, ஆர்த்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கிடையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில் பாடகியும், மனநல மருத்துவருமான கெனிஷாவுடன் ஜோடியாக ரவி மோகன் பங்கேற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
புதிதாக வந்தவர்களால் அழகாக தெரிந்த வாழ்க்கை தற்போது கசக்க ஆரம்பித்து விட்டதாக ஆர்த்தி, தனது மௌனத்தை கலைத்து ரவி மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு மீண்டும் ரவி பலகோடி ரூபாய்க்கு கடனை என்மீது சுமத்தியதாக ஆர்த்தி மட்டுமல்லாது அவரது தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா மீதும் குற்றசாட்டுகளை முன்வைத்ததோடு, கெனிஷா தனது வாழ்க்கையின் அழகான துணை என்றும் அறிக்கை வெளியிட்டார்.
இவ்வாறு இருவரும் மாறி மாறி அறிக்கை மூலம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்ள, ரவி மோகனின் விவாகரத்து வழக்கு கடந்த 21-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்திக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருவரும் அவதூறு கருத்துகளை வெளியிட தடைவிதித்து, ஏற்கனவே பதிவு செய்த கருத்துகளை நீக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள்காடி, தனது திருமண விவகாரம் தொடர்பான செய்திகளை 24 மணி நேரத்தில் நீக்கம் செய்ய வேண்டும் என நடிகர் ரவி மோகன் அனைத்து ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அத்தோடு தன்னைப் பற்றி சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ள அவதூறு கருத்துகளை நீக்க வேண்டும் என ஆர்த்தி மற்றும் அவரது தாய் சுஜாதா ஆகியோருக்கும் ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.