ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் சத்யேந்திரா. புகழ்பெற்ற கன்னட நாடக இயக்குநர் பி.வி.காரந்தின் தொடர்பால் நாடகங்களில் நடிக்க துவங்கினார். பின், தேசிய விருது பெற்ற ’நாகபர்ணா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 7 மொழிகளில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 150க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மொழிப்பெயர்ப்பாளர், விமர்சகர் என பன்முகத்திறன் கொண்ட இவர், தமிழில் ’ஏழாவது மனிதன்’ படம் மூலம் அறிமுகமானார்.
மண்வாசனை, சத்யா, மீண்டும் ஒரு காதல் கதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு மற்றும் 2021-ல் வெளியான ‘ஜெயில்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சத்யேந்திராவின் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை.
அதனால் அவரது உடல் ராயப்பேட்டை பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு அல்லது கர்நாடகாவில் உள்ள அவரது இரத்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது உடலை பெற முன்வர வேண்டும் என நடிகை வினோதினி வைத்யநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவரது உறவினர்களை போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
