ஜூலை 13 ஆம் தேதி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், நீண்டகாலமாகப் படக்குழுவுடன் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம்போலவே கிராஷ் காட்சியைப் படமாக்குவதற்கு முன், தெளிவான திட்டமிடல் மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளைத் திட்டமிட்டு, செயல்படுத்துவதில் நிகரற்ற கலைஞராகத் திகழ்ந்த மோகன் ராஜின் வழிகாட்டுதலையும், சண்டை இயக்குனர் திலீப் மாஸ்டரின் விரிவான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் மதித்து, தவறாமல் பின்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்” என்று படக்குழு வேதனையுடன் தெரிவித்துள்ளது.

 

செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு, தனது நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களைப் பெருமைப்படுத்திய கலைஞர் அவர் என்றும், ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றும் அவருக்குச் சமர்ப்பணம் என்றும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

“இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்” என்று படக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version