கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் வெட்டப்பட்ட இளைஞரின் கை துண்டான நிலையில் 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து கையை ஒட்ட வைத்து நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் விழாவில் நடந்த மோதலில் இளைஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு இடது கை மணிகட்டு பகுதி துண்டானது. இந்த நிலையில் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் துண்டான கையும் கொண்டு வரப்பட்டது. அவருக்கு இடது கையை 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பொருத்தி இயங்கும் நிலைக்கு கொண்டு வந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா இசக்கி. இவருக்கு வயது 21. இவர் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலின் போது பிச்சையா இசக்கியின் இடது கை அரிவாளால் வெட்டப்பட்டு மணிகட்டு பகுதியில் இருந்து துண்டாகி விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்து சேர்த்தனர்.

மேலும் துண்டாகி விழுந்த அவரது இடது கை மணலில் இருந்து போலீசார் மீட்டெடுத்து அதனை ஐஸ் பேக்கில் பாதுகாப்பாக வைத்து கொண்டு வந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்டது. இதை அடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் அழைக்கப்பட்டு, அறுவை சிகிச்சை பேராசிரியர் செந்தில் சிவமுத்து தலைமையிலான குழுவினர் சுமார் 10 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து அவரது கை ரத்த ஓட்ட நரம்பு, தசை திசுக்கள், எலும்பு ஆகியவற்றை இணைத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்தனர்.
அவருக்கு சுமார் 6 பாட்டில் ரத்தம் செலுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மாதம் கடந்த நிலையில் அவரது இணைக்கப்பட்ட கைப்பகுதியில் ரத்த ஓட்டம் சீராகி தற்போது கையை அசைக்கிறார். உணர்வு ஏற்பட தொடங்கியுள்ளது. படிப்படியாக குணமடைந்துள்ளார். மேலும் பூரண குணமடைந்து வழக்கமான நிலையில் இடது கையை இயக்க முடியும். இந்த அபூர்வ அறுவை சிகிச்சையில் வெட்டுப்பட்ட பகுதியில் மீண்டும் இயக்கம் கிடைப்பது அரிதான செயலாகும். இதை தமிழக அளவில் நம் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்துள்ளனர்” என தெரிவித்தார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version