மனோஜ் பாண்டியனை போல் மேலும் பலர் வந்து முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செவிலியர் கல்லூரி அமையவுள்ள இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 பள்ளிகள், 10 கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 22,807 மாணவர்கள் பயில்கிறார்கள். பழனியில் உள்ள திருக்கோயிலில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அடுத்து பழனி திருக்கோயிலில் காலை 4500 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் பழனியில் உள்ள உண்டு உறைவிடத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மூன்று வேலை உணவு வழங்கப்பட உள்ளது.

கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் மேல்நிலைபள்ளியில் 980 பிள்ளைகள் பயில்கிறார்கள். இந்த இடத்தில் செவிலியர் கல்லூரி தொடங்க ஆய்வு மேற்கொண்டோம். சமயபுரத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி தொடங்க உள்ளோம். ஸ்ரீரங்கத்தில் சிற்ப கலை குறித்தான பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.

மருதமலையில் பாலிக்டெக்னிக் கல்லூரி கட்டுவதற்காக முறையாக அனுமதி பெற்று மண் பரிசோதனை மேற்கொண்டு அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம். வருகின்ற தை மாதம் கீழ்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி தற்காலிகமாக செயல்பட ஏற்பாடு செய்ய இருக்கிறோம். 60 முதல் 100 பேர் பயிற்சி பெற உள்ளார்கள்” என்றார்.

தொடந்து, மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, “Wait and see… மேலும் பலர் வந்து முதல்வர் கரத்தை வலுப்படுத்துவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் உறுதியாக வெல்வோம். அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளரின் தலைமை எப்போது ஒழியும் என்று தான் அதிமுகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நாம் கண்கூடாக பார்கிறோம்.

கோவையில் மாணவி பாலியல் குற்றச்சம்பவத்தில் 48 மணி நேரத்தில் மூன்று பேரை சுட்டு பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறோம். இந்த சம்பவத்தில் முதலமைச்சர் 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உரிய தண்டனை விரைவில் பெற்று தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதற்கு மேல் அரசாங்கம் எப்படி விரைவாக செயல்பட முடியும்? சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.

போதை புழக்கம் அதிகமாக உள்ளதால் தான் இது போன்ற தவறுகள் நடப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுவது, அவர்களின் நோக்கம், குற்றம் சொல்லுவது தான் என்பதை காட்டுகிறது. ஆட்சியில் இருக்கின்ற போது தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் பொறுப்பேற்க முடியும். மாறாக முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளை எடுத்துள்ளார்” என்றார்.

மேலும், சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்கு தமிழக பக்தர்களுக்கு என்னென்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “சபரிமலை யாத்திரைக்கும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் முதல் கட்டமாக அனுப்ப இருக்கிறோம். அங்கு 24 மணி நேரமும் தமிழக பக்தர்களுக்கு உதவும் வகையில் அலுவலகத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.

கீழே பம்பையில் அப்பல்லோ, காவேரி, ராமச்சந்திரா மருத்துவமனைகள் துணையோடு மண்டல காலங்களில் மருத்துவ வசதி கொண்ட வேன்களை முழு நேரமும் நிறுத்துவதற்கான அனுமதி கோரி இருக்கிறோம். அதனை கண்காணிக்க துறையின் சார்பாக குழுவை அமைத்து இருக்கிறோம். சபரிமலைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கேரளா அரசின் துணையோடு மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version