தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 8,144 அரசு ஊழியர்கள் இன்று (மே 31, 2025) ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். நடப்பாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக அரசுத் துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவது வழக்கம். குறிப்பாக, மே மாதங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள்.
இதற்கு முக்கிய காரணம், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வியாண்டு நிறைவுபெறும் மே மாதத்தில் ஓய்வு பெறுவதே ஆகும். அந்த அடிப்படையில், இன்று ஓய்வு பெறும் 8,144 பேரில், குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், குரூப்-பி பணியிடங்களில் 4,399 பேரும், குரூப்-சி பணியிடங்களில் 2,185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் அடங்குவர். கல்லூரிப் பேராசிரியர்கள் குரூப்-ஏ பிரிவிலும், பள்ளி ஆசிரியர்கள் குரூப்-பி பிரிவு ஊழியர்களாகவும் இருப்பார்கள்.
இந்த 8,144 பேர் என்பது மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும். சென்னை தலைமைச் செயலகத்தில் மட்டும் இன்று 30 பேர் ஓய்வு பெறுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.