நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம் பெற்றிருந்த பாஜக, 27 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒட்டுமொத்தக் கூட்டணியும் சரிவைச் சந்தித்ததுடன், பாஜக வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே தட்டுத்தடுமாறி வெற்றி பெற முடிந்தது.
இந்த மோசமான தேர்தல் தோல்வி, கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்தது. குறிப்பாக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் வியூகங்களும், கட்சியை வழிநடத்திய விதமும் தோல்விக்கு முக்கியக் காரணம் என டெல்லி தலைமை கருதுவதாக பாஜக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷா கறார்
இந்த நிலையில், இந்தத் தோல்வி குறித்து விவாதிப்பதற்காகவும், தமிழக பாஜகவின் அடுத்தகட்டப் பயணம் குறித்தும் ஆலோசிக்க நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் அவசர மையக்குழு (Core Committee) கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் தற்போதைய அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு, “விரைவில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் மாற்றம் செய்யப்பட இருக்கிறார்; புதிய தலைவர் அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கான முழுமையான ஒத்துழைப்பை மாநில நிர்வாகிகள் அனைவரும் எவ்வித முரணுமின்றி வழங்க வேண்டும்” என்று அமித்ஷா கறாராக உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
அண்ணாமலையின் விலகலும் பாதிப்பும்
தமிழக பாஜக தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் நயினார் நாகேந்திரன் மீதான அதிருப்தி மட்டுமல்ல, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் திடீர் விலகலும்தான். பாஜகவிலிருந்து விலகியதோடு மட்டுமன்றி, ‘We The Leaders’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி, அது விரைவில் தனி அரசியல் கட்சியாக மாறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ் உள்ளிட்ட பல முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட, அடிமட்டப் பொறுப்பாளர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
இப்படி கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் திடீர் இடப்பெயர்வு தமிழக பாஜகவின் உள்கட்டமைப்பைப் பலவீனப்படுத்தியுள்ளது.
புதிய பாஜக தலைவர் யார்?
இந்த நிலையில், சரிந்துள்ள கட்சியின் கட்டமைப்பை மீண்டும் சீரமைக்கவும், அண்ணாமலையின் வெளியேற்றத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவும், ஆர்.எஸ்.எஸ் பின்னணியும், தீவிர சித்தாந்தப் பிடிப்பும் கொண்ட ஒருவரைத் தலைவராக்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், புதிய மாநிலத் தலைவருக்கான பட்டியலில் இரண்டு முக்கியப் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன
வழக்கறிஞர் அஸ்வத்தாமன்

கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கும் இவர், ஊடக விவாதங்களில் கட்சியின் கொள்கைகளைத் துணிச்சலாக முன்வைப்பவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.
பேராசிரியர் ராம சீனிவாசன்
கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருக்கும் இவர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் நீண்ட காலத் தொடர்பில் இருப்பவர் மற்றும் முதிர்ச்சியான அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதால் டெல்லி மேலிடத்தின் பரிசீலனையில் உள்ளார்.
தேர்தல் தோல்வி ஒருபுறம், அண்ணாமலையின் விலகல் மற்றும் நிர்வாகிகளின் வெளியேற்றம் எனத் தமிழக பாஜக இதுவரை கண்டிராத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறது.

இந்த நிலையில், தமிழக பாஜகவுக்கு தலைமை பொறுப்பை ஏற்கப் போகிறவர்தான், தற்போதைய நெருக்கடியிலிருந்து கட்சியை மீட்டெடுத்து, தமிழக பாஜகவின் எதிர்காலத் திசையைத் தீர்மானிக்கப் போகிறார். அந்த சவாலை எதிர்கொள்ளப் போகிறவர் யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
– பா. முகிலன்
