நாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் பிரதமர் மோடி தனது ஆதரவாளர்களை மட்டுமே முக்கியப் பதவிகளில் அமர்த்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டின் முக்கியப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிபோய்விட்டதாகக் மல்லிகார்ஜூன கார்கே கவலை தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் உத்தரவு இல்லாமல் இது நடந்திருக்காது என்றும் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
நாட்டின் மிக முக்கிய மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட உயர் பதவிகளில், தகுதியின் அடிப்படையில் அல்லாமல், பிரதமர் மோடியும் அவரது கட்சியும் தங்களது கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நபர்களை மட்டுமே திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்து நியமிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டு, எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்தப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இந்த ஒருதலைப்பட்சமான நியமனங்களால் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக மாண்புகள் மற்றும் வழிமுறைகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தன்னாட்சி அமைப்புகளின் நியமனங்கள் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை குறித்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பும் என்றும் அவர் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார்.
