“மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்து வழங்கும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘அலிம்கோ’ (ALIMCO)-வின் கிளை அலுவலகத்தை, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அமைக்கப் போராடிப் பெற்றதும், அதற்கான அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமைப்பதற்கான இடத்தைப் பெற்றுள்ளதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதனை எனக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் கூறியுள்ளதாவது;-

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை வழங்குவதில், மதுரை மாவட்டம் தேசிய அளவில் முதன்மையான பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக கடந்த 6 ஆண்டுகளில் உருவெடுத்துள்ளது.

“மாற்றும் மதுரை” என்னும் பெயரில், மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டன.

ஒன்றிய அரசின் சமூகநலன் மற்றும் அதிகாரம் வழங்கல்துறை, மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் திட்டங்களை இணைத்து 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மிக விரிவான முறையில் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இம்முகாம்களில் 17,796 பேர் பங்கெடுத்துப் பயனடைந்துள்ளனர். இதுபோக சிறப்புப் பள்ளி மாணவர்கள் 2,500 பேரின் தேவைகளும் இத்துடன் இணைக்கப்பட்டன. மொத்தத்தில் 20,296 பேர் பங்கேற்றுப் பயனடைந்தனர். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற முகாம்களிலேயே மிக அதிகமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றது மதுரை முகாம்களில் தான்.

இந்திய அளவில் பிரதமர் அவர்களின் தொகுதிக்கு அடுத்தபடியாக, அதிகமான பயனாளிகள் பங்கேற்ற இரண்டாவது மாவட்டமாக மதுரை மாறியது அனைவரும் அறிந்ததே.

இம்முகாம்களில் அலிம்கோ (ALIMCO) மூலம் செயற்கை உபகரணங்கள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டு, அளவீடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,546 ஆகும். இவர்களுக்குரிய கருவிகளை அலிம்கோ நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது. சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உபகரணங்களை, மாபெரும் முகாம் நடத்தி வழங்கினோம். இந்நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கும் அலிம்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தமிழ்நாட்டிற்கான அலுவலகம் சென்னையில் மட்டுமே இயங்கி வந்தது. மதுரையில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களைப் பெற்றுக்கொடுத்த பின்னணியில், இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மூலமாகவும் வலியுறுத்திப் போராடியதன் விளைவாக, அந்த கிளை அலுவலகத்தை மதுரையில் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது.

இதனால், அலிம்கோ நிறுவனத்தின் கிளை தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அமைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

ஆனால், அதற்கான அலுவலகம் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான இடம் வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசாங்கத்திற்கு உரியது. மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் இதற்கான இடத்தினை ஒதுக்கித் தரக் கோரி தொடர்ந்து வலியுறுத்தினோம்.

‘மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு’ கூட்டத்திலும் இதுகுறித்து பலமுறை விவாதித்தோம். மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இடத்தை ஒதுக்கித் தரக் கோரினோம்.

ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம் வில்லாபுரத்தில் ஒரு இடத்தை வழங்கியது. அது மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இல்லை; பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது.

அதன்பின், தமிழக முதல்வர் தலைமையிலான ‘மாநில வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்’ கடந்த 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து கவனத்திற்குக் கொண்டு சென்று, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அலுவலகம் தேவை என வலியுறுத்தினேன். அதன் விளைவாக, அப்போதைய தலைமைச் செயலாளர் தலையிட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டினார். ஆனாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், கடந்த 2026 ஜூலை 3 அன்று நடைபெற்ற ‘மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு’ கூட்டத்தில், அலிம்கோ நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் புதிய இடத்தைத் தேர்வு செய்ய வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. அதன் விளைவாக, மாவட்ட ஆட்சியரும் நானும் நேரில் பார்வையிட்டு இடத்தைத் தேர்வு செய்தோம். அந்த இடத்தில் அலிம்கோ நிறுவனத்திற்கான அலுவலகம் அமைக்க 250 சதுர அடி அறையும், உபகரணங்களை வைக்க 1,200 சதுர அடி கொண்ட அறையும் தற்போது மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் செய்துவரும் தொடர் பணிகளில், இது மிக முக்கியமான வெற்றியாகக் கருதுகிறேன். அலிம்கோ நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமைப்பதற்கான இடத்தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version