சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில், போலீசாரை கத்தியால் தாக்கிய ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக உள்ள கருப்பு என்ற தமிழழகு (27) மீது கஞ்சா கடத்தல், இரட்டை கொலை உள்ளிட்ட மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில், தனது நண்பர் சூர்யாவுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழழகை கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலீசாரைக் கண்ட தமிழழகு, தப்பிக்க முயன்றதுடன், காவலர் விஜயகுமாரை கத்தியால் தாக்கினார். இதில், காவலர் விஜயகுமாரின் வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தற்காப்பு நடவடிக்கையாக தமிழழகின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். குண்டு காயமடைந்த தமிழழகை போலீசார் மடக்கிப் பிடித்து, உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தப்பி ஓடிய அவரது நண்பர் சூர்யாவையும் போலீசார் தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சிலம்பு என்பவரைக் கொலை செய்யும் நோக்கில் தமிழழகும், சூர்யாவும் இணைந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version