பிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 19) நள்ளிரவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி திங்கள்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்பதால், மாணவர்கள் போட்டியை முழுமையாகக் கண்டு மகிழவும், மறுநாள் பள்ளிக்குச் செல்லும் சிரமத்தைத் தவிர்க்கவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் என். சம்சுதீன் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார். “கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, கேரள பொதுக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, சிபிஎம் மூத்த தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான வி. சிவன்குட்டி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியிருந்தார். அவருடன், யுடிஎஃப் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
மேலும், விடுமுறைக்குப் பதிலாக அடுத்த சனிக்கிழமை பள்ளிகளை செயல்படச் செய்து கல்வி நாட்களை ஈடுகட்டலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.
