டெல்லி ஜந்தர் மந்தரில் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது நாளில் காவல்துறையால் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மருத்துவமனையில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு முதல் முறையாக செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், ஜந்தர் மந்தரில் இருந்து தன்னை அகற்றியது “சட்டவிரோத காவலில் வைப்பதற்கு சமம்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஜூலை 20-ஆம் தேதி நடைபெற உள்ள Cockroach Janta Party (CJP)-யின் நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த இயக்கத்தை “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்” என்று வர்ணித்துள்ள சோனம் வாங்சுக், “அச்சமற்ற இந்தியா, அநீதியற்ற இந்தியா” உருவாக வேண்டும் என்றும் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார். அவரது மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ மூலம் இந்தக் கைஎழுத்து குறிப்பை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நீட் (NEET) தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர், கல்வித் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு இதுவரை அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் அனுமதி வழங்கப்பட வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளன.
சப்தர்ஜங் மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், இருப்பினும் நீண்டகால உண்ணாவிரதத்தால் ரத்தப் பரிசோதனை மதிப்புகளில் சிறிய மாற்றங்கள் காணப்படுவதால் பல்துறை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், சோனம் வாங்சுக் நரம்பு வழி திரவங்கள் (IV Fluids), வாய்வழி நீரேற்றக் கரைசல் மற்றும் மருந்துகளை மருத்துவர்களின் பலமுறை ஆலோசனைக்குப் பிறகும் ஏற்க மறுத்ததாகவும், பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையிலும், அவசர மருத்துவ சிகிச்சைக்காகவே சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும், தேர்வு முறைகேடுகள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தலையும் மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.
