சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் வந்தனர். சபாநாயகர் இல்லாததால், அவர்கள் சட்டப்பேரவை செயலாளர் சாந்தியை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு தலைமைச் செயலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அறையை சீரமைக்க ஏற்கனவே மனு அளித்திருந்ததாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் கேட்டபோது, எம்.எல்.ஏ.க்களின் இருக்கை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், எடப்பாடி பழனிசாமியின் அறை சீரமைப்புப் பணிகள் நாளை தொடங்கும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறினார்.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை சில முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாக பதிலளித்தார்.
ஆளுநர் மாளிகையில் குதிரைப் பேரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து கேட்கப்பட்டபோது, “புகார் அளிப்பது எங்களுடைய பணி; அதற்கு பதில் கூற வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பு” என்றார்.
மேலும், “அதிமுகவின் 41 சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஒற்றுமையுடன் இருக்கிறோம். விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதனை அனைவரும் நேரில் பார்க்க முடியும்” என்று தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
