மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்று ராகுல் காந்தி வெளிப்படையாக அறிவித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து பாமக விலகத் தயாராக இருப்பதாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ்நாட்டின் நலனுக்கு பாதகமாக அமையும் என்றார். தமிழ்நாடு ஏற்காத, அங்கீகரிக்காத திட்டம் குறித்து கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பலமுறை உத்தரவிட்டும், கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய அன்புமணி, மேகதாது அணை கட்டப்பட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். எனவே, முதல்வர் கர்நாடகா செல்லாமல், முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை தவறாக விளக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 1892 மற்றும் 1924 ஒப்பந்தங்களும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் கீழ்மடை மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கின்றன என்றும், அவற்றை மீறி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தி, மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு எதிரானது என்றும், அந்த அணையை கட்டக் கூடாது என்றும் அறிவித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகத் தயார் என அன்புமணி சவால் விடுத்தார். மேலும், கிரேட் நிகோபார் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் காரணங்களைக் கூறி எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, மேகதாது அணையால் 12,500 ஏக்கர் காடுகளும் மூன்று புலிகள் சரணாலயங்களும் பாதிக்கப்படுவது குறித்து ஏன் பேசவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
