தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் ‘தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா- 2026’, மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1971-ம் ஆண்டின் ‘தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்டத்தில்’ மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தின் மூலம், தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையான சட்டப் பாதுகாப்பு தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்கப்படுகிறது.
வந்தே மாதரம் பாடப்படுவதை வேண்டுமென்றே தடுப்பது அல்லது பாடும் கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்துவது ஆகியவை குற்றமாக கருதப்படும். இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இன்று (ஜூலை 30) மக்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “நாட்டின் தலைவர்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகளை அங்கீகரித்தநிலையில், தற்போது 6 பத்திகளையும் பாடுவதைக் கட்டாயமாக்குவது ஏற்கத்தக்கதல்ல” என்றனர். மேலும், இச்சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் மாநிலப் பாடல்களின் முன்னுரிமைக்கும் எதிராக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சட்டத்திருத்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளது.
