சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லயோலா கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக காலை 8.30 மணிக்கு கல்லூரியின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரியில் வளாகத்திற்கு உள்ளாகவே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதேபோல், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் மே 17 இயக்கம் சார்பில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகையிடப்பட்டது. திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததையடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் விமர்சித்த அவர், மெரினா போன்ற பொது இடங்களில் மாணவர்கள் போராடுவதற்கு அரசு உரிய இடம் ஒதுக்க வேண்டும் என்றும், இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் மத்திய அரசு அச்சமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version