ஆஸ்திரேலிய ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். இத்தொடரில் சிந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.
சனிக்கிழமை இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில், உலகின் தரம் வாய்ந்த முதன்மை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை (Akane Yamaguchi) பி.வி.சிந்து எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு வீராங்கனைகளும் புள்ளிகளைப் பெற கடுமையாகப் போராடினர். முதல் கேமில் சிந்து அதிரடியாக விளையாடி யமகுச்சிக்கு ஈடுகொடுத்த போதிலும், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் யமகுச்சி 22-20 என்ற கணக்கில் முதல் ஆட்டத்தை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். சிந்துவின் தவறுகளைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், 21-12 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது ஆட்டத்தையும் மிக எளிதாக வென்றார்.
இறுதியில் 20-22, 12-21 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்துவை வீழ்த்திய அகானே யமகுச்சி, ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதி வரை முன்னேறி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பி.வி.சிந்து, இந்தத் தோல்வியின் மூலம் ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறினார்.
