அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் கைதாகியுள்ள 8 நபர்களுக்காகவும் அயோத்தியில் உள்ள பைசாபாத் பார் அசோசியேஷன் (Faizabad Bar Association) வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடக் கூடாது என அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளோடு விளையாடி, சாமி காணிக்கையைத் திருடியவர்களுக்கு எவ்வித சட்ட உதவியும் செய்யக் கூடாது என்பதில் வழக்கறிஞர்கள் உறுதியாக உள்ளனர். இந்த உத்தரவை மீறி, கைதான நபர்களுக்காக நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்கறிஞராவது ஆஜரானால், அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்களின் உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், ராமர் கோவில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் அவர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றாலும், அவர்கள் உடனடியாக அயோத்தியை விட்டு வெளியேற வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் 3 நாட்களுக்குள் அவர்கள் நகரை விட்டு வெளியேறாவிட்டால், அயோத்திக்கு வரும் வழிகளை முற்றுகையிட்டுப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வழக்கில் கோவிலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ் குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ் உள்ளிட்ட 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, ஜூன் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி நிதியாதார ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத் ராயிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version