குழந்தைகள் மனநலம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் இத்தகைய கடுமையான தடையை அமல்படுத்தும் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
பிரெஞ்சு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமை நேற்று நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தை, வரும் செப்டம்பர் மாதம் புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் அமல்படுத்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விரும்புகிறார். எனினும், அமல்படுத்துவதற்கு முன்பு இது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட மறுஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இச்சட்டத்தின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதோடு, பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளிகளில் கைப்பேசி பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள், கல்வித் தளங்கள் மற்றும் அறிவியல் அடைவுப் பக்கங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, மாணவர்களின் கற்றல் வளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது மற்றும் ஏற்கெனவே உள்ள கணக்குகளைக் கண்டறிந்து முடக்குவது நடைமுறையில் பெரும் சவாலாக இருக்கும் எனச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளிடம் அதிகரித்து வரும் செல்போன் மற்றும் சமூக வலைதளப் பயன்பாடு அவர்களின் சுயமரியாதையைக் குறைப்பதுடன், தற்கொலை மற்றும் சுய காயம்படுத்துதல் போன்ற ஆபத்தான பழக்கங்களுக்கு வழிவகுப்பதாகப் பிரான்ஸின் சுகாதாரக் கண்காணிப்பகம் எச்சரித்திருந்தது. இதைக் கருத்திற்கொண்டு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திற்குப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் கடும் வரவேற்பளித்துள்ளன. ஆஸ்திரேலியா, பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே இது போன்ற சட்டங்களை அமல்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிரான்ஸும் இந்த உலகளாவிய முயற்சியில் இணைந்துள்ளது.
