தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த இயக்குநர்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முதன்மையானவர். கதைக்களங்களை மட்டும் மாற்றாமல், அறிமுகம் செய்யும் ஒவ்வொரு கலைஞர்களையும், ஒரு நட்சத்திரமாக மாற்றும் வித்தை அவரிடம் இருந்தது. இவரது அறிமுகங்கள் தமிழ் திரையுலகின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்தன.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தனர். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகளில் பெரும்பாலோர் ‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டிருந்தது ஒரு சுவாரஸ்யமான அம்சம்.
ராதிகா (கிழக்கே போகும் ரயில்),
ராதா (அலைகள் ஓய்வதில்லை),
ரேவதி (மண்வாசனை),
ரதி அக்னிஹோத்ரி (புதிய வார்ப்புகள்),
விஜயசாந்தி (கல்லுக்குள் ஈரம்),
ரேகா (கடலோரக் கவிதைகள்)
சுகன்யா (புது நெல்லு புது நாத்து) ஆகியோர் பாரதிராஜாவால் அடையாளம் காணப்பட்டு திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள்.
பாரதிராஜா நடிகர்களை உருவாக்குவதில் மட்டுமல்ல, சிறந்த கலைஞர்களை உருவாக்குவதிலும் முன்னோடியாக இருந்தார். பல உதவி இயக்குநர்களை நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும் செதுக்கிய பெருமை இவரையேச் சாரும்.
பாக்யராஜ் (புதிய வார்ப்புகள்),
கார்த்திக் (அலைகள் ஓய்வதில்லை),
பாண்டியன் (மண்வாசனை)
விஜயன் (கிழக்கே போகும் ரயில்)
சந்திரசேகர் (புதிய வார்ப்புகள்)
நெப்போலியன் (புது நெல்லு புது நாத்து) போன்ற நடிகர்கள் இவரது படங்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தடம் பதித்தனர்.
பாரதிராஜாவின் பள்ளியில் பயின்ற உதவி இயக்குநர்கள் பலர் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறினர். மணிவண்ணன், பாக்யராஜ், மனோபாலா மற்றும் பொன்வண்ணன் போன்றோர் இயக்குநர்களாகவும், சிறந்த நடிகர்களாகவும் போற்றப்படுவதற்கு, பாரதிராஜாவின் வழிகாட்டுதல் மிக முக்கிய காரணமாக இருந்தது.
