தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில், தாயும் அவரது மூன்று குழந்தைகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடங்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணனுக்கும் (39), அம்சா என்ற பெண்ணுக்கும் (35) கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜீவிதா (16), நவீனா (6), குமரன் (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 19ஆம் தேதியன்று அம்சாவுக்கும் சரவணனுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அம்சா, தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேதாஜியின் விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் நான்கு பேரின் உடல்களும் மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட அம்சா மற்றும் மூன்று குழந்தைகளின் வயிற்றிலும் கல் கட்டப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
