பிரபல எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், சாகித்ய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் (எ) பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
திரு. பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார். அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.
திரு. பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் திரு. பூமணி அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தனது இரங்கல் செய்தியில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
