சென்னை தலைமைச்செயலக வளாகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பேட்டரி காரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் விஜய், கோட் அணியாமல் வெள்ளை சட்டையுடன் பேட்டரி காரில் பயணம் செய்து தலைமைச் செயலக வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  10 நாட்களுக்கும் மேலாக தலைமைச் செயலகம் வந்தாலும், முழுமையாக அவர் அந்த வளாகத்தைப் பார்வையிடவில்லை என்பதால், பேட்டரி கார் மூலம் தலைமைச் செயலகத்தைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலயத்திற்கு  சென்று முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தலைமைச் செயலகத்தை சுற்றி, அகழி தோண்டப்பட்டு அதில் முதலைகள் போடப்பட்டிருந்தது பற்றியும், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பற்றியும் உயரதிகாரிகள் முதலமைச்சர் விஜய்க்கு விளக்கினார்.

தமிழ்நாட்டின் 40க்கும் மேற்பட்ட துறைகளின் தலைமை அலுவலகம் இங்குதான் செயல்படுகிறது என்பதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்கள். கோட்டை காவல்நிலையம், உணவகம், அஞ்சல் நிலையம் என பல வசதிகள் கொண்டதாக தலைமைச் செயலக வளாகம் அமைந்துள்ளது. இதற்கு என பிரத்யேகமாக ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் உள்ளன.

தலைமைச்செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் பார்வையிடும் தகவல் அறிந்து, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சரைக் காண குவிந்தனர். இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version