பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவுப் பகுதியில் இன்று காலை நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 07:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவோ தீவின் சரங்கனி (Sarangani) மாகாணக் கடற்கரையை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் 33 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, இந்தோனேசியா வரை உணரப்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டது. எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.
நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. குறிப்பாக, அங்குள்ள புகழ்பெற்ற ‘ஜோலிபி’ (Jollibee) உணவகம் முற்றிலும் இடிந்து துகள்களாக மாறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நிலநடுக்கத்தால் மலைக் கிராமங்களில் பயங்கர நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இதில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள சரங்கனி மாகாணத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மேனி பக்குவாவின் சொந்த ஊரான ‘ஜெனரல் சாண்டோஸ்’ நகரில் 10 பேர் பலியானதோடு, 22-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோரப் பகுதிகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாகப் பல இடங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் சேத விவரங்களை முழுமையாக ஆய்வு செய்து வருகிறது.
